நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித். இதை போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.
அஜித், போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்திருந்தார்
இதற்கிடையே, இதில் நடிகர் பிரசன்னாவும் நடிப்பதாகச் செய்திகள் வெளியானது. அஜித்துக்கு வில்லனாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. வலிமை படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்விக்கு, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், வலிமை-யில் நடிக்கவில்லை என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.
எனக்கு அது மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த நல்ல வாய்ப்பு இந்த முறை கிடைக்க வில்லை. மிகுந்த ஏமாற்றத்துக்கு இடையிலும் உங்கள் அன்பால் இன்னும் வலிமையாக உணர்கிறேன். அஜித்துடன் இணைந்து நடிக்கும் என் கனவு விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.